dcsimg

கடல் விண்மீன் ( Tamil )

provided by wikipedia emerging languages

கடல் விண்மீன் (Sea stars) அல்லது உடுமீன் (Starfish) (வேறு பெயர்: நட்சத்திரமீன்) என்பது முட்தோலிகள் தொகுதியைச் சார்ந்த, அசுட்டெரொய்டியா வகுப்பில் காணப்படும் விண்மீன் வடிவிலான உயிரினமாகும். ஒபியுரோய்டியா வகுப்பு உயிரினங்களையும் கடல் விண்மீன்கள் என்று அழைப்பதுண்டு. எனினும் அவற்றை நொறுங்கு விண்மீன் என்று அழைத்தலே சரியானது.[2]

 src=
சிவப்புக் குமிழ் நட்சத்திரமீன் Protoreaster linckii, இந்தியப் பெருங்கடலில் காணப்படும் ஒருவகை விண்மீன் உயிரி

உலகக் கடற்பரப்பில் ஏறத்தாழ 2000 விதமான விண்மீன் உயிரி இனங்கள் வசிக்கின்றன, இவை அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடற் பகுதிகளில் மட்டுமல்லாது ஆர்க்டிக், அண்டார்டிக்கா என்னும் துருவக் கடற் பகுதிகளிலும் காணப்படுகின்றன. அலையிடை மண்டலம் தொடங்கி ஆழ்கடல் மண்டலம் வரையிலான பெருங்கடலின் பல்வேறுபட்ட வளையங்களில் இவை வசிக்கின்றன. விண்மீன் உயிரிகள் பலவகைப்பட்ட உடலமைப்புக்களையும் உணவருந்தும் முறையையும் கொண்டுள்ளன.

அசுட்டெரொய்டியா வகுப்பானது சூழ்நிலையியல், உயிரியல் போன்றவற்றில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. ஊதாக் கடல் விண்மீன் (Pisaster ochraceus) போன்ற உயிரினங்கள் மறைதிறவு இனக் கருதுகோள் (keystone species) தொடர்பாகப் பரவலாக அறியப்பட்டவையாகும். கலிபோர்னிய கருநீலச்சிப்பி (Mytilus californianus ) இனங்களை உணவாகப் பயன்படுத்துவதன் மூலம் ஊதாக் கடல் விண்மீன்கள் சூழ்நிலையியல் சமநிலையைப் பேணுகின்றன. இத்தகைய விண்மீன்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் சிப்பிகளின் எண்ணிக்கை பெருகி, அவை உண்ணும் தாவர வகை அழிக்கப்படும், இது சூழ்நிலையைப் பாதிப்புக்குள்ளாக்கின்றது. முள்முடி (முட்கிரீட) கடல் விண்மீன்கள் (Acanthaster planci) பவள உயிரினங்களை (முருகைக்கல்) வேட்டையாடும் கொன்றுண்ணியாகும்.

உருவ அமைப்பு

முதிர் கடல் விண்மீன்கள் வலது, இடது வேறுபாடு அற்ற ஆரைச் சமச்சீரும் இவற்றின் குடம்பிகள் (லார்வா) இருபக்கச்சமச்சீரும் உடையவை. பெரும்பாலான கடல்விண்மீன்கள் ஐந்துக் கைகள் கொண்டவை, இவை மையத்தட்டில் இருந்து நீட்டிச் செல்லுகின்றன, எனினும் சில இனங்கள் ஆறு அல்லது அதற்கும் அதிகமான கைகளைக் கொண்டிருக்கும்.[3][4]

விண்மீன் உயிரியின் உடல் கால்சியம் கார்பனேற்றுக் (சுண்ணாம்பு) கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது, இது சுண்ணாம்புத் தகடு எனப்படும். இவை உயிரியின் அகவன்கூட்டை ஆக்குகின்றது, இவை புறப்பகுதியில் முள் நீட்சிகளாக அல்லது சிறுமணிகளாக வெளிநீட்டப்படுகின்றன. விண்மீன் உயிரியின் அடிப்புறத்தில் வாய்ப்பகுதி உள்ளது; மேற்புறத்தில் வாயெதிர்ப் பகுதி உள்ளது.

வாயெதிர்ப் பகுதியில் வட்டவடிவான வெளிரிய நிறத்தாலான தாய்க்கற்றகடு (madreporite) எனப்படும் சல்லடை போன்ற அமைப்பு, எளிதில் அடையாளம் காணக்கூடியவாறு மையத்தட்டின் மத்தியில் இருந்து சற்று விலகிக் காணப்படுகின்றது. கடல்நீரானது தாய்க்கற்றகடு வழியே உட்சென்று, பின்னர் கால்சியவழிக்குள் சென்றடையும், இந்தக் கல்வழியானது நீரோட்டக் குழலித் தொகுதியை இணைக்கின்றது; இது இவ்வுயிரியின் மேலதிக நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகின்றது.

வால்வட்டசியா (Valvatacea) உட்பட பெரும்பாலான விண்மீன் உயிரிகள், குறிப்பாகப் போர்சிபுலட்டாசியா (Forcipulatacea), நுண் இடுக்கிகள் (pedicellariae) எனப்படும் சிறிய அடைப்பிதழ் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளன. இவற்றின் முழுமையான செயற்பாடுகள் அறியப்படவில்லை, எனினும் பாதுகாப்பிலும் உணவூட்டத்திலும் இவை உதவி புரிகின்றன என அறியப்பட்டுள்ளது. வட பசிபிக் இசுடைலாசுடேரியாசு (Stylasterias ) சிறுமீன்களை நுண் இடுக்கிகள் மூலம் பிடிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

அக உடற்கூற்றியல்

 src=
அசுடேரியாசு ருபென்சு விண்மீன் உயிரியின் பிளப்பாய்வு
1 - புறவாயில் இரைப்பை (Pyloric stomach) 2 - சிறுகுடலும் குதமும் 3 - நேர்குடற்பை 4 - கல்வழி 5 - தாய்க்கற்றகடு 6 - புறவாயில் குருட்டுக்குழல் 7 - சமிபாட்டுச் சுரப்பிகள் 8 - இதய இரைப்பை 9 - இனஉறுப்பு 10 - ஆரைக் குழாய் 11 - குழாய்க்கால்

முட்தோலிகளைச் சார்ந்த உயிரிகளில் அசைவதற்கு உதவும் நீரோட்டக் குழலித் தொகுதி காணப்படும், கடல்விண்மீனிலும் இத்தகைய தொகுதி காணப்படுகின்றது.[5] நீரோட்டக் குழலித் தொகுதியில் இருந்து வெளிப்படும் பெருமளவிலான நீட்டங்கள் குழாய்க்கால் (en:tube feet) எனப்படும். இவை உயிரியின் அசைவிலும் உணவுட்கொள்ளலிலும் சுவாசத்திலும் பங்கெடுக்கின்றன. ஒவ்வொரு கைகளிலும் உள்ள வரிப்பள்ளங்களில் நீண்ட வரிசையில் குழாய்க்கால்கள் அமைந்திருக்கும். இவை நீர்ம அழுத்தத்தின் மூலம் தொழிற்படுகின்றன.

உடற்குழியில் நீரோட்டக் குழலித் தொகுதி மட்டுமல்லாது சுற்றோட்டத்தொகுதியும் காணப்படுகின்றது. இத்தொகுதி குருதித்தொகுதி அல்லது கெமல் தொகுதி என அழைக்கப்படுகின்றது, இவற்றின் சிறுகுழலிகள் வாயைச் சுற்றி ஒரு வளையத்தை ஏற்படுத்துகின்றது, இவ்வளையம் வாய்க் குருதி வளையம் எனப்படும். மேற்பகுதியில் சமிபாட்டுத்தொகுதியைச் சுற்றியுள்ள வளையம் இரையக குருதி வளையம் எனப்படும்.[6]

ஒவ்வொரு கைகளின் நுனிப்பகுதியில் நுண்ணிய கண் போன்ற அமைப்பு இதன் பார்வைக்கு உதவுகின்றது. வெளிச்சத்தை அல்லது இருளை மட்டுமே கண்டறிதல் மூலம் அசைவதற்குத் துணைபோகின்றது.[7]

சமிபாட்டுத்தொகுதி

விண்மீன் உயிரியின் வாய் உடலின் அடிப்பாகத்தில் உள்ளது, இது குறுகிய உணவுக்குழாயுடன் இணைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து இதய இரைப்பை காணப்படுகின்றது, இதன் தொடர்ச்சியாகப் புறவாயில் இரைப்பை அமைந்துள்ளது. மையத்தில் அமைந்துள்ள புறவாயில் இரைப்பையில் இருந்து புயத்தை நோக்கிச் செல்லும் குழாய்கள் இரண்டாகப் பிரிவடைந்து இரு புறவாயில் குருட்டுக்குழல்கள் உருவாகுகின்றன, இவை ஒவ்வொரு புயத்திலும் நீட்டமாக இருக்கும், இவை ஒவ்வொன்றும் தன்னகத்தே சமிபாட்டுச் சுரப்பிகளைக் கொண்டுள்ளது. ஒரு சிறிய சிறுகுடல் புறவாயில் இரைப்பையின் மேற்புறத்தில் இருந்து உருவாகி மேற்புறத்தின் மையத்தில் காணப்படும் குதத்தில் இணைகின்றது.[8]

அசுத்திரோப்பெக்டேன் (en:Astropecten) மற்றும் உலுயிடியா (en:Luidia) போன்ற விண்மீன் உயிரிகள் தமது இரையை முழுமையாக விழுங்கிக் கொள்கின்றன, புறவாயில் குருட்டுக்குழல்களை அடையுமுன்னர் இரைப்பையுள் அவற்றின் தொடக்கநிலை சமிபாடு நிகழ்கின்றது.[8] பெரும் எண்ணிக்கை இனங்களில் இதய இரைப்பை விண்மீன் உயிரியில் இருந்து வெளித்தள்ளப்படுவது நிகழ்கின்றது. இது விழுங்குவதற்கும் சமிபாடு நிகழவும் பின்னர் இரையை புறவாயில் இரைப்பைக்குச் செலுத்தவும் ஏதுவாக உள்ளது. புறவாயில் இரைப்பை எப்பொழுதும் அகத்திலேயே இருக்கும்.[9]

உடலுக்கு வெளிப்புறத்தில் இத்தகைய சமிபாடு நிகழ்வதால் கடல் விண்மீன்கள் தமது வாயைவிடப் பெரிதான சிறுமீன்கள், சிப்பிகள், பூச்சிகள் போன்ற இரைகளை வேட்டையாடுகின்றன. சில விண்மீன் உயிரிகள் தாவர உணவுகளையும் உட்கொள்கின்றன.[8]

நரம்புத்தொகுதி

சிக்கலான நரம்புத்தொகுதியைக் கொண்டுள்ளன, ஆனால் மைய நரம்பு உறுப்பான மெய் மூளை எனப்படும் அமைப்பு அற்றவை. எல்லாவகை முட்தோலிகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த நரம்புப் பின்னல்களைக் கொண்டுள்ளன, இவை தோற் பகுதியிலோ அல்லது அதற்குக் கீழோ காணப்படும்.

சிறப்பான புலன் உறுப்புகள் என்று ஒன்றுமில்லாவிடினும் அவை தொடுதல், வெளிச்சம், வெப்பம், அமைவிட உணர்வு மற்றும் தம்மைச் சூழவுள்ள நீரின் தன்மை போன்றவற்றை உணரும் திறன் கொண்டவை.[10] குழாய்க்கால், முட்கள், நுண் இடுக்கிகள் தொட்டுணர்வு உடையவை; நுனியில் காணப்படும் நுண்கண்கள் வெளிச்சத்தை உணரக்கூடியவை.[11] புயத்தின் நுனியில் காணப்படும் குழாய்க்கால்கள் வேதிப்பொருட்களை இனம் காணக்கூடியவை, இதன் மூலம் உணவுப்பொருட்கள் உணரப்படுகின்றது.[11]

அசைவு

 src=
விண்மீன் உயிரியின் அடிப்பாகம், குழாய்க்காலின் உருப்பெருக்கத்தை அவதானிக்கலாம்

விண்மீன் உயிரி அசைவதற்கு நீரோட்டக் குழலித் தொகுதி உதவுகின்றது. தாய்க்கற்றகடு வழியாக இத்தொகுதிக்குள் நீர் புகுந்து சுற்றோட்டம் நடைபெறுகின்றது. தாய்க்கற்றகட்டில் இருந்து கல்வழியுள் சென்ற நீர் பின்னர் வளையக்குழாயை (ring canal) அடைகின்றது, அங்கிருந்து விண்மீன் உயிரியின் ஒவ்வொரு புயத்திற்கும் நீட்டப்பட்டுள்ள ஆரைக்குழாயை நோக்கிச் செல்கின்றது, இறுதியில் ஆரைக்குழாயில் இருந்து குழாய்க்காலின் குடுவைப்பகுதியை (ampulla) அடைகின்றது.

குழாய்க்காலின் உட்புறத்தில் குடுவைப்பகுதியும் வெளிப்புறத்தில் பாதமும் காணப்படுகின்றன. குடுவைப்பகுதி அழுத்தப்படுவதால் அங்கு தங்கியுள்ள நீர் ஒரு விசையுடன் பாதத்துள் பீச்சப்படுகின்றது, இச்செயலில் சுருங்கியிருந்த பாதம் விரிவடைந்து வெளிப்புறத்துக்கு நீட்டப்பட்டு விண்மீன் உயிரி நிலைகொண்டுள்ள தளத்தைத் தொடுகின்றது; பாதம் சுருங்கும்போது தொடுகை அற்றுப்போய்விடுகின்றது, இவ்வாறு ஏராளமான குழாய்க்கால்களின் பாதங்கள் விரிவடைந்து அசைவதாலும் பின்னர் அவை சுருங்குவதாலும் விண்மீன் உயிரி அசைகின்றது. [12]

 src=
எக்ஸ்-கதிர் நுட்பம் மூலம் கடல் விண்மீனின் அகவன்கூடு

அகவன்கூடு

ஏனைய முட்தோலிகள் போன்று சுண்ணாம்பாலான சிற்றென்புகள் உள்ளடக்கமாக இருக்கும் இடைத்தோற்படை அகவன்கூட்டைக் கொண்டுள்ளது,

சுவாசமும் கழிவகற்றலும்

குழாய்க்கால் ஊடாகக் சுவாசம் நடைபெறுகின்றது, இது தவிர சிறிய பப்புலே (papullae) எனப்படும் அமைப்பூடாகவும் உடல் மேல்பரப்பில் நடைபெறுகின்றது. நீரில் செறிந்துள்ள ஒட்சிசன் உடற்குழியை அடைந்து அங்கிருந்து உடலின் ஏனைய பாகங்களுக்குச் செல்கின்றது.[8]

நைதரசன் கழிவுப்பொருட்கள் குழாய்க்கால் மற்றும் பப்புலே ஊடாக வெளியேற்றப்படுகின்றது, இங்கு தனித்துவமான கழிவகற்றும் உறுப்புக்கள் ஏதேனும் இல்லை. உடல் நீர்மத்தில் காணப்படும் தின்குழியங்கள் உடற்குழியணுக்கள் (coelomocytes) எனப்படுகின்றது, இவை நீரோட்டக் குழலித் தொகுதி மற்றும் குருதித்தொகுதி ஆகியனவற்றிலும் காணப்படுகின்றது. இவ்வுயிரணுக்கள் கழிவுப்பொருட்களை விழுங்கிப் பப்புலேயின் நுனிப்பகுதிக்கு அசைகிறது, அங்கிருந்து சுற்றிவர உள்ள நீருக்குள் தள்ளப்படுகின்றது. சில கழிவுப்பொருட்கள் புறவாயில் சுரப்பியூடாக வெளியேறுகின்றது.[8]

வாழ்க்கை வட்டம்

கடல்விண்மீன்கள் கலவி இனப்பெருக்கம், கலவியிலா இனப்பெருக்கம் ஆகிய இரண்டையும் நடத்தக்கூடியவை. பெரும்பான்மையான இனங்கள் ஆண், பெண் என்று தனித்தனியான இருபாற் கொண்டவை, சில இனங்கள் அழிதூக்கள் ஆகும். எடுத்துக்காட்டாக, அசுடேரினா கிப்போசா எனும் பொதுவான இனம் பிறப்பின் போது ஆணாக இருந்து, பின்னர் பெண்ணாக மாற்றம் பெறும்.[8]

வெளித்தோற்றத்தை வைத்து ஆண் பெண் வேறுபாடுகளை இனம்காண முடியாது, பாலுறுப்புக்களை அவதானிப்பது மூலமே இனம் காணமுடியும். ஒவ்வொரு புயத்திலும் இரண்டு பாலுறுப்புக்கள் உண்டு, இவை இனவிருத்தி அணுக்களை மைய உடலில் காணப்படும் இனஉறுப்பு நாளம் வழியாக வெளியேற்றும்.

இனப்பெருக்கம்

ஆண், பெண் இனம் தமது இனவிருத்தி அணுக்களைப் புறச்சூழலுக்கு வெளியேற்றுவதன் மூலம் கருக்கட்டல் புறத்தில் நிகழ்கின்றது. சில இனங்கள் முட்டைகளை அவற்றின் மேல் இருப்பதன் மூலம் அடைகாப்பதுண்டு, சில புறவாயில் இரைப்பைக்குள் அடைகாக்கப்படுகின்றது. அடைகாக்கும் இனங்களின் முட்டை மற்றவையை விடப் பெரியது.[8]

உயிரித்தொழில் நுட்பவியல் பயன்பாடு

பல்வேறு வகையான நச்சுப்பதார்த்தங்களும் வளர்சிதை வினைபொருட்களும் பற்பல விண்மீன் உயிரிகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்தச் சேர்மங்கள் மருத்துவத்திற்கோ அல்லது கைத்தொழிலுக்கோ உபயோகப்படுத்துவது பற்றிய ஆய்வுகள் உலகளாவியரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன.

படத்தொகுப்பு

வெளியிணைப்புகள்

  1. அக உடற்கூற்றியல் படம்
  2. யூடியூப் குழாய்க்கால் காணொளி
  3. பவளப் பாறைகளை சேதப்படுத்தும் நட்சத்திர மீன்களைக் கொல்ல புதிய வழி

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Sweet, Elizabeth (2005-11-22). "Asterozoa: Fossil groups: SciComms 05-06: Earth Sciences". பார்த்த நாள் 2008-05-07.
  2. Mooi, Rich. "Classification of the Extant Echinodermata." California Academy of Sciences – Research. <http://research.calacademy.org/research/izg/echinoderm/classify.htm>.
  3. "Starfish." 16 May 2008. HowStuffWorks.com. <http://animals.howstuffworks.com/marine-life/starfish-info.htm> 16 January 2009.
  4. You superstar! Fisherman hauls in starfish with eight legs instead of five, டெய்லி மெயில், 24 October 2009, accessed 3 January 2010.
  5. "Wonders of the Sea: Echinoderms." Ceanside Meadows Institute for the Arts and Sciences. <http://www.oceaninn.com/guides/echino.htm>.
  6. "Sea stars on Chek Jawa, Pulau Ubin, Singapore." Wildsingapore. <http://www.wildsingapore.org/chekjawa/text/p610.htm>.
  7. "Animal Eyes." San Diego Natural History Museum--Your Nature Connection in Balboa Park. 31 Dec. 2002. <http://www.sdnhm.org/exhibits/eyes/overview.html>.
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 Barnes, Robert D. (1982). Invertebrate Zoology. Philadelphia, PA: Holt-Saunders International. பக். 939–945. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-03-056747-5.
  9. "Marine Biology Echinodermata – Sea Star." <http://home.earthlink.net/~huskertomkat/star.html>.
  10. "Starfish brains, night length, space radiation." WonderQuest. 18 Apr. 2008
  11. 11.0 11.1 Dale, Jonathan. "Why Do Starfish Always Have Five Rays?" Madreporite Nexus. 24 May 2009.
  12. Campbell & Reece, Biology, Pearson Cummings, 2008, p. 693 ISBN 0-321-54325-4
license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கடல் விண்மீன்: Brief Summary ( Tamil )

provided by wikipedia emerging languages

கடல் விண்மீன் (Sea stars) அல்லது உடுமீன் (Starfish) (வேறு பெயர்: நட்சத்திரமீன்) என்பது முட்தோலிகள் தொகுதியைச் சார்ந்த, அசுட்டெரொய்டியா வகுப்பில் காணப்படும் விண்மீன் வடிவிலான உயிரினமாகும். ஒபியுரோய்டியா வகுப்பு உயிரினங்களையும் கடல் விண்மீன்கள் என்று அழைப்பதுண்டு. எனினும் அவற்றை நொறுங்கு விண்மீன் என்று அழைத்தலே சரியானது.

 src= சிவப்புக் குமிழ் நட்சத்திரமீன் Protoreaster linckii, இந்தியப் பெருங்கடலில் காணப்படும் ஒருவகை விண்மீன் உயிரி

உலகக் கடற்பரப்பில் ஏறத்தாழ 2000 விதமான விண்மீன் உயிரி இனங்கள் வசிக்கின்றன, இவை அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடற் பகுதிகளில் மட்டுமல்லாது ஆர்க்டிக், அண்டார்டிக்கா என்னும் துருவக் கடற் பகுதிகளிலும் காணப்படுகின்றன. அலையிடை மண்டலம் தொடங்கி ஆழ்கடல் மண்டலம் வரையிலான பெருங்கடலின் பல்வேறுபட்ட வளையங்களில் இவை வசிக்கின்றன. விண்மீன் உயிரிகள் பலவகைப்பட்ட உடலமைப்புக்களையும் உணவருந்தும் முறையையும் கொண்டுள்ளன.

அசுட்டெரொய்டியா வகுப்பானது சூழ்நிலையியல், உயிரியல் போன்றவற்றில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. ஊதாக் கடல் விண்மீன் (Pisaster ochraceus) போன்ற உயிரினங்கள் மறைதிறவு இனக் கருதுகோள் (keystone species) தொடர்பாகப் பரவலாக அறியப்பட்டவையாகும். கலிபோர்னிய கருநீலச்சிப்பி (Mytilus californianus ) இனங்களை உணவாகப் பயன்படுத்துவதன் மூலம் ஊதாக் கடல் விண்மீன்கள் சூழ்நிலையியல் சமநிலையைப் பேணுகின்றன. இத்தகைய விண்மீன்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் சிப்பிகளின் எண்ணிக்கை பெருகி, அவை உண்ணும் தாவர வகை அழிக்கப்படும், இது சூழ்நிலையைப் பாதிப்புக்குள்ளாக்கின்றது. முள்முடி (முட்கிரீட) கடல் விண்மீன்கள் (Acanthaster planci) பவள உயிரினங்களை (முருகைக்கல்) வேட்டையாடும் கொன்றுண்ணியாகும்.

license
cc-by-sa-3.0
copyright
விக்கிபீடியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்